Tuesday, March 24, 2015

மாலை


கலியபெருமாளுக்கு எதிர்காலேமே இருண்டுவிட்டது போல் தோன்றியது.

செய்து வந்த சிறுதொழிலும் முடங்கிப் போச்சு என்றால் மனுஷன் என்ன தான் செய்வான்? எப்படி குடும்பம் நடத்துவது?

மயிலாப்பூரின் ஏராளமான குறுக்குச் சந்துகளில் ஒன்றில் குடியிருந்தான் அவன். குளத்தருகே ஒரு பூமாலைக் கடை வைத்திருந்தான். கடை என்றதும் ஏதோ பெரிய ரேஞ்ச் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சின்னக் கடை. அதுகூட ஒரு CD கடையின் மாடிக்குக் கீழ் இருந்த இடத்தில் அவன் கடை.

கைக்கும் வாய்க்கும் எட்டாத பிழைப்பு. பட்டினி என்றில்லாமல் ஏதோ குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. மகன் ராசுவுக்கு கவர்மென்ட் ஸ்கூல் படிப்பு. ஒவ்வொரு நாளும் ஏதோ குழம்பு சாதம் ஊறுகாய் என்று கிடைத்தாலே பெரிய விஷயம். பெருமாளின் அம்மா நித்திய நோயாளி. அது வேறு தனி செலவு.

ராசுவுக்கு மீன் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் வஞ்சிரம் என்றால் உயிர். ஆனால் கலியபெருமாளின் வருமானத்தில் வஞ்சிரம் ஒரு எட்டாத கனவாகவே இருந்தது.

இப்படி ஏதோ ஓடிக்கொண்டிருந்தவன் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம். அவன் கடை வைத்திருந்த பில்டிங் ஓனர் அதை விற்றுவிட்டார். அந்த இடத்தில் வேறு ஏதோ கடை வரப்போகிறது. எந்தக் கடை வந்தாலும் இவனுக்கு இடம் கிடைக்காது. இவன் தொழில் முடங்கியது.

இவன் வேறு வழி தெரியாது  வீட்டில் இருந்தபடியே மாலை செய்து வியாபாரம் செய்து வந்தான். ஆனால் கடையில் கிடைக்கும் வருமானம் இல்லை. பெரிய மாலைகளுக்கான ஆர்டர் துர்லபம் ஆயிற்று.

அப்போது ஒரு நாள் குளக்கரையில் இவன் நின்றிருந்த போது செண்பகத்தைப் பார்த்தான். செண்பகம் இவன் கடை வைத்திருந்த போது ரெகுலர் கஸ்டமர். கோவிலுக்குப் போகையில் இவன் கடையில் மாலை வாங்காமல் போக மாட்டாள்.

வயது அறுபதிருக்கும். ஒண்டிக்கட்டை. அவள் வீட்டுக்காரர் தவறி இருவது வருஷங்களுக்கு மேலாகிறது. ஒரே மகன். அவன் இப்போது எங்கேயோ வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பதாகச் சொல்லுவாள்.

அவள் வீடு இவன் இருந்த ஏரியாவில் தான் இருந்தது. என்ன இவன் இருந்தது குறுக்குச் சந்து. அவள் வீடு மெயின் ஏரியாவில் பெரிய பங்களா.  ரொம்ப நல்லவள் செண்பகம். அவள் இருந்த தெருவில் அவளைப் பிடிக்காதவர்கள் கிடையாது. எல்லாருக்கும் என்ன உதவி என்றாலும் முதல் ஆளாய் நிற்பாள்.

“என்ன பெருமாள், உன் கடைய இடிச்சுட்டாங்களாமே” என்று விசாரித்தவளிடம் தன் துக்கத்தைக் கொட்டி விட்டான் பெருமாள். அவன் கதையைக் கேட்ட செண்பகம் கண்ணில் நீர் துளிர்த்தது. பர்சில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்துப் பெருமாள் கையில் திணித்தாள்.

தீயைத் தொட்டது போல துள்ளினான் பெருமாள். ‘இதெல்லாம் வேணாம்மா, எனக்குப் பொழைப்புக்கு எதுனாச்சியும் ஒரு வளி சொல்லுங்க’ என்று அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.

அவன் தன்மானத்தைக் கண்டு செண்பகம் மகிழ்ந்தாள். “பெருமாள்! நீ கவலைப் படாதே! என் மகன்கிட்ட சொல்லி கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்றேன்! அத வச்சு மெயின் மார்க்கட்டுல ஒரு கடை பிடிச்சுக்கோ. அட, கடனாத்தான் தர்றேன். சம்பாத்திச்சு கொஞ்சம் கொஞ்சமா திருப்பிடு. சரியா?’ என்று கேட்டாள். பெருமாள் மிகவும் மகிழ்ந்தான்.

அன்று இரவு மனைவியிடம் நடந்ததைச் சொன்னபோது அவள் சந்தோஷப்பட்டாலும், அந்த ஐநூறு ரூபாயைத் திருப்பித் தந்திருக்கக் கூடாது என்பது அவள் வாதம். வீட்டில் ஒரு பைசா இல்லை. நாளை சாப்பாட்டுக்கு அந்தப் பணம் உபயோகப்பட்டிருக்குமே என்று அவள் நினைத்ததிலும் தப்பில்லை.

‘நீ கவலைப் படாதே புள்ள! நம்ம கடை பக்கத்துல கூல் டிரிங் கடை வச்சிருக்கான் இல்ல சிங்காரம், அவன் கிட்ட கொஞ்சம் பணம் கைமாத்தா வாங்கியாறேன் நாளைக்கு. செம்பகம் அம்மா பணம் கொடுத்தாவுட்டு திருப்பி கொடுத்துறலாம்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.


மறு நாள் சுமார் ஒன்பது மணிக்கு சிங்காரத்தைப் பார்க்கச் சென்றான். இவன் அதிர்ஷ்டம் சிங்காரம் கடை பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்தபோது அவன் ஊருக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.

பெருமாள் அயர்ந்தான். பயந்தான். மனைவுக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தான். சரி வேறு வழியில்லை. செம்பகம் அம்மாவிடம் சென்று கொஞ்சம் பணம் கடன் வாங்கித் தான் வர வேண்டும். மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவள் வீடு இருந்த திசையில் நடந்தான்.

அவள் வீட்டை நெருங்கியபோது அவள் வீட்டு வாசலில் கூட்டம். மனசு திடுக்கிட்டது. ஓட்டமும் நடையுமாக வீட்டை நெருங்கினான்.

இவன் வருவதை செண்பகத்தின் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டார்.

“வாய்யா பெருமாள்! ஒன்னத் தான் நெனச்சேன். காலைல செம்பகம் அம்மா தவறிட்டாங்க. மகனுக்கு செய்தி சொல்லியாச்சு. நாளைக்கு வந்துடுவான்.  அது வரைல நாங்க தான் பாத்துக்கணும். நாளைக்கு எடுக்கையில போட நல்ல பெருசா நெருக்கமா வச்சு கட்டி நாலு மாலை வேணும். இந்தாப்பிடி பணம். பாக்கிய நாளைக்கு வாங்கிக்க.” என்று சொல்லி அவன் கையில் மூன்று ஐநூறு ரூபாய் தாள்களைத் தந்தார்.

பெருமாளுக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.



No comments: